Reading Time: < 1 minute

கனடாவின் வான்கூவர் நகரின் மையப்பகுதியில் கடந்த வாரம் மிதிவண்டி ஒன்று மோதியதில் படுகாயமடைந்த சுற்றுலாப் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

அமெரிக்காவிலிருந்து வான்கூவர் நகரிற்குச் சுற்றுலா வந்திருந்த 72 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 29ஆம் திகதி மாலை 5:30 மணியளவில், ‘வெஸ்ட் கோர்டோவா’ மற்றும் ‘ரிச்சர்ட்ஸ்’ வீதிகள் சந்திக்கும் சந்திப்பிற்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் அந்த முதியவர் சுயநினைவை இழந்து, ஆபத்தான நிலையில் வான்கூவர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதன்போது அவருடன் இருந்த அவரது மனைவியும் மிதிவண்டி மோதி லேசான காயங்களுக்குள்ளானார்.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த முதியவர், ஜூலை 5ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வான்கூவர் பொலிஸ் திணைக்களம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதசாரிகள் கடப்பதற்காகக் குறிக்கப்பட்டிருந்த கோடுகளினூடாக அவர்கள் வீதியை கடந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது என்றும், அந்த நேரத்தில் பாதசாரிகளுக்கே வீதியைக் கடப்பதற்கான முன்னுரிமை இருந்தது என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய மிதிவண்டி ஓட்டுநருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதுடன், அவர் விபத்து நடந்த இடத்திலேயே தங்கியிருந்து பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.