கனடாவின் British Columbia மாகாணத்தில், பள்ளி மாணவர் ஒருவருக்கு பாலியல் தூண்டல்மிக்க வீடியோ அனுப்பிய குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற முன்னாள் ஆசிரியை ஒருவருக்கு அடுத்த 15 ஆண்டுகள் ஆசிரியப் பணியில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வான்கூவர் தீவுப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஆசிரியை Kelsey MacRae Blake, “குழந்தைகளைக் கவர்ந்திழுத்தல்” (Child Luring) குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியா ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையத்துடன் சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
மாகாண ஆசிரியர் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, பிளேக் தனது பள்ளியில் கல்வி கற்ற மாணவர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தூண்டல்மிக்க வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து சிறுவர் ஒருவரைச் சார்ந்த நான்கு பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில், 2023 ஜனவரி 5ஆம் திகதி அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். பின்னர் ஜனவரி 13ஆம் திகதி பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
2025 ஏப்ரல் 23ஆம் திகதி, 18 வயதிற்குட்பட்ட குழந்தையைக் கவர்ந்திழுப்பதற்காக தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டில் Kelsey MacRae Blake குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
Port Hardy நீதிமன்றத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மீதமிருந்த மற்ற மூன்று குற்றச்சாட்டுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்பாகவே, 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வருடாந்திர பயிற்சி கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் அவரது கற்பித்தல் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டிருந்தது.
புதிய உடன்படிக்கையின்படி, British Columbia மாகாணத்தில் மழலையர் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான எந்தவொரு சான்றிதழுக்கும் அல்லது அங்கீகாரத்திற்கும் அடுத்த 15 ஆண்டுகள் விண்ணப்பிக்கமாட்டேன் என பிளேக் ஒப்புக்கொண்டுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.