கனடாவில் பொதுவாக ஒவ்வாமை மற்றும் சில பாக்டீரியா தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்காக பயன்படுத்தப்படும் ‘Benadryl’ (பெனட்ரில்) மருந்தை இளைஞர்கள் ஆபத்தான முறையில் அதிக அளவில் பயன்படுத்துவது குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, ஒன்டாரியோவில் உள்ள நிபிசிங் ஃபர்ஸ்ட் நேஷன் பழங்குடியின சமூகத்தில் இந்த பிரச்சினை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், இந்த மருந்தை அதிக அளவில் உட்கொண்டால் ஒருவித “உற்சாகம்” அல்லது “வித்தியாசமான அனுபவம்” கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கையில் பயன்படுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இவ்வாறு அளவுக்கு அதிகமாக Benadryl மருந்தை பயன்படுத்துவது எந்தவித நன்மையையும் தராது என்றும், அது நேரடியாக உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார நிபுணர்கள் கூறுகையில், ஒருவரின் வயது, உடல் எடை, உடல்நிலை மற்றும் அவர் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பிற மருந்துகள் ஆகியவற்றைப் பொறுத்தே இந்த ஆன்டிஹிஸ்டமைன் மருந்தின் பாதுகாப்பான அளவு மாறுபடும் என தெரிவித்துள்ளனர்.
Benadryl மருந்தை தவறாக அல்லது அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய அறிகுறிகளாக:
- அதிக பதற்றம்
- இதயத்துடிப்பு அசாதாரணமாக அதிகரித்தல்
- எரிச்சலான மனநிலை
- இல்லாதவற்றை காண்பது அல்லது கேட்பது போன்ற மாயத்தோற்றங்கள்
- வலிப்பு
போன்றவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலைமை மோசமடையும் போது:
- கடுமையான தூக்கக் கலக்கம்
- சுவாசம் மெதுவாகுதல்
- சிறுநீர் கழிப்பதில் சிரமம்
- கோமா நிலை
- மரணம்
போன்ற தீவிர விளைவுகளும் ஏற்படலாம் என நிபிசிங் ஃபர்ஸ்ட் நேஷன் அமைப்பு எச்சரித்துள்ளது.
சுகாதார அதிகாரிகள், மருந்துகளை மருத்துவர் அல்லது மருந்தாளர் பரிந்துரைத்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக இளைஞர்கள் சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான “challenge” அல்லது தவறான தகவல்களை நம்பி மருந்துகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.