Reading Time: < 1 minute

கனடாவில் மதுபானங்கள் (பீர், வைன் மற்றும் டிஸ்டில்லரி தயாரிப்புகள்) மீது விதிக்கப்படும் வருடாந்திர வரி உயர்வை கட்டுப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

Tamil Business Directory

இந்த முடிவு மூலம் மதுபான உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் கூடுதல் செலவுச் சுமை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரணமாக, கனடாவில் மதுபானங்களுக்கு விதிக்கப்படும் ‘Excise Tax’ ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் தேதி பணவீக்கத்துடன் இணைந்து அதிகரிக்கப்படுகிறது. ஆனால், 2023ஆம் ஆண்டிலிருந்து இந்த உயர்வை 2% அளவில் கட்டுப்படுத்தும் தற்காலிக நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த கட்டுப்பாடு இவ்வாண்டுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது அதனை 2028ஆம் ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சிறிய அளவிலான பீர் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக, ஆண்டுக்கு முதல் 15,000 ஹெக்டோலிட்டர் உற்பத்திக்கு விதிக்கப்படும் கலால் வரியில் 50% தள்ளுபடி வழங்கும் திட்டமும் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய வர்த்தக சவால்கள் மற்றும் விநியோகச் சங்கிலி பிரச்சினைகள் நிலவுகின்ற சூழலில், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு நிலைத்தன்மையை வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, இந்த கோடையில் நடைபெறவுள்ள FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி காலத்தில் மதுபானங்களுக்கான தேவைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த வரிச்சலுகை உற்பத்தியாளர்களுக்கு முக்கிய நிம்மதியை அளிக்கும் என கருதப்படுகிறது.

இதற்கிடையில், மதுபானங்களின் வரி உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் Canadian Taxpayers Federation தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.