Reading Time: < 1 minute

கனடாவில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வரும் ‘வீடு வீடாகச் சென்று தபால் வழங்கும் சேவை’ விரைவில் நிரந்தரமாக நிறுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

மத்திய அரசு கடந்த இலையுதிர்காலத்தில் வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில், Canada Post தனது வணிக மாதிரியில் பெரிய மாற்றங்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

வரி செலுத்துவோருக்கு கூடுதல் சுமை ஏற்படாமல், காலத்திற்கேற்ப மாறிவரும் கனடியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுவதாக Canada Post திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு முதல் பல பில்லியன் டாலர் இழப்புகளை சந்தித்து வரும் Canada Post, தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு, அரசு மாற்றங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் Joël Lightbound கடந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். நிறுவனம் தற்போது ‘இருப்புச் சிக்கல்’ நிலையை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையை சமாளிக்கும் முயற்சியாக, தற்போது சில பகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் வீடு வீடாக தபால் விநியோகத்தை முற்றிலும் நிறுத்தி, அதற்குப் பதிலாக ‘Community Mailboxes’ எனப்படும் பொதுத் தபால் பெட்டிகள் வழியாக விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த முடிவுக்கு Canadian Union of Postal Workers (CUPW) கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றம் ஊழியர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதோடு, குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், புதிய தொழிலாளர் ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் வாக்கெடுப்புகள் நடைபெற்று வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது, பேச்சுவார்த்தையை பாதிக்கக்கூடியதாக உள்ளது என்றும் CUPW தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த மாற்றத் திட்டம் குறித்து முழுமையான விவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், Canada Post தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், 2009ஆம் ஆண்டு அறிமுகமான ‘Canadian Postal Service Charter’ திருத்தம் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.