கனடாவின் மாண்ட்ரியல் அருகே உள்ள செயின்ட்-பாசில்-லே-கிராண்ட் (Saint-Basile-le-Grand) பகுதியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைக் கழுத்தில் குத்திக் கொன்ற முகமது அலி மோஸ்பா (56) என்பவர், செவ்வாய்க்கிழமை அன்று லோங்குவில் (Longueuil) நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஆரம்பத்தில் இவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அவர் ‘மனிதப்படுகொலை’ என்ற குறைவான குற்றச்சாட்டின்கீழ் குற்றவாளியாக ஒப்புக்கொண்டுள்ளார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின்படி, இந்தத் தம்பதியினரிடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வந்துள்ளது.
குறிப்பாக, மோஸ்பா தனது முதல் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது அவரது மனைவி ஹயத்தே பூகெல்லிட்க்கு பிடிக்கவில்லை.
சம்பவத்தன்று, தனது மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் காரணமாக ஒரு வாரமாகப் பார்க்காத குழந்தைகளைக் காண மோஸ்பா திட்டமிட்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மனைவி, “நீ குழந்தைகளைப் பார்க்கப் போகவில்லை, வேறொரு பெண்ணைப் பார்க்கப் போகிறாய்” எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அன்று இரவு மோஸ்பா வீடு திரும்பியபோது, மனைவி ஹயத்தே அவரைத் தாக்கியதோடு, ஒரு சிறிய கண்ணாடி மேஜையையும் தூக்கி எறிந்துள்ளார்.
பின்னர் சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பின் போது, மோஸ்பா கத்தியைப் பிடுங்கி மனைவியின் கழுத்தில் மூன்று முறை குத்தியுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.