டொராண்டோ வுட்பைன் மால் வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 37 வயதுடைய சந்தகுமார் ராஜா நந்தகுமார் என டொராண்டோ காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3:30 மணியளவில் எடோபிகோக் பகுதியிலுள்ள ரெக்ஸ்டேல் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த நந்தகுமாரை கடுமையான காயங்களுடன் கண்டுபிடித்தனர். பின்னர் அவசர மருத்துவ சேவையினரால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், குறுகிய நேரத்தில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் திட்டமிட்ட துப்பாக்கிச் சூடு (targeted shooting) என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் அல்லது நபர்கள் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டிற்கு வழிவகுத்த காரணங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
சம்பவ இடத்தில் வெள்ளை நிற SUV வாகனம் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டு, ஆதாரச் சான்றுகள் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2026 ஆம் ஆண்டில் டொராண்டோவில் பதிவான மூன்றாவது கொலை சம்பவமாகும்.




