Reading Time: < 1 minute

டொராண்டோ மாநகராட்சியின் பழைய நிலுவைப் பார்க்கிங் டிக்கெட்டுகள் தொடர்பான நடவடிக்கை, ஒன்ராறியோ ஓட்டுநர் ஒருவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

ஜார்ஜ்டவுன் அருகே உள்ள லைம்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ஜெஃப் கிளென்டென்னிங் என்பவருக்கு, 1996ஆம் ஆண்டு செலுத்தப்படாத பார்க்கிங் டிக்கெட் காரணமாக அவரது ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டதாக அஞ்சல் மூலம் அறிவிப்பு வந்துள்ளது.

இந்தக் கடிதத்தைப் பார்த்தபோது, அது ஏமாற்று முயற்சியாக இருக்கலாம் என முதலில் நினைத்ததாக ஜெஃப் தெரிவித்துள்ளார். ஆனால் பின்னர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, 30 வருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட பார்க்கிங் டிக்கெட்டுக்கான நிலுவைத் தொகை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த நேரத்தில் செலுத்த வேண்டிய அபராதத் தொகை வெறும் 32.75 டொலர்கள் மட்டுமே என கூறப்படுகிறது. அதில் ஒரு பகுதி செலுத்தப்பட்டிருந்தாலும், மீதித் தொகை நிலுவையில் இருந்ததால், தற்போது அவரது ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நேரடியாக அனுமதிப்பத்திரம் ரத்து செய்யப்பட்டிருப்பது தமக்கு அதிர்ச்சியளித்ததாக ஜெஃப் கூறியுள்ளார். “15 நாட்களுக்குள் பணம் செலுத்துங்கள்; இல்லையெனில் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்” என்று ஒரு எச்சரிக்கை கடிதம் அனுப்பியிருக்கலாம் என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நிலுவையில் இருந்த பார்க்கிங் அபராதத்தை அவர் உடனடியாகச் செலுத்தியிருந்தாலும், ரத்து செய்யப்பட்ட அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பெறுவதற்கு கூடுதலாக 281 டொலர் செலுத்த வேண்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கூடுதல் கட்டணம் அநியாயமானது என ஜெஃப் குற்றம் சாட்டியுள்ளார். ஒருவருக்கு அது கார் மாதத் தவணையாகவோ, உணவு செலவாகவோ அல்லது மருத்துவச் செலவாகவோ இருக்கக்கூடும் என்றும், இவ்வாறான பழைய நிலுவைத் தொகைகளில் நடவடிக்கை எடுக்கும் முன், மக்களுக்கு போதிய முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம், பல வருடங்களுக்கு முன் செலுத்தப்படாமல் விட்ட பார்க்கிங் டிக்கெட்டுகள் எதிர்காலத்தில் ஓட்டுநர்களுக்கு எதிர்பாராத சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.