முதலாம் உலகப் போரில் உயிரிழந்து, 111 ஆண்டுகளுக்கும் மேலாக உடல் கண்டறியப்படாமல் இருக்கும் கனடிய ராணுவ அதிகாரி ஒருவரின் உடலைத் தேடி கண்டுபிடித்து, கனடாவிற்கு கொண்டு வர அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்டாரியோவின் சவுத்தாம்ப்டன் பகுதியைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜோசப் லயனல் ட்ரான்டர், 1915ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி, தனது 28வது வயதில் முதலாம் உலகப் போரில் உயிரிழந்தார்.
Canadian Infantry-யின் Western Ontario Regiment, 1st Battalion பிரிவில் பணியாற்றிய அவர், பிரான்சில் நடைபெற்ற போரில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ பதிவுகள் தெரிவிக்கின்றன. எனினும், அவரது உடல் எங்கு புதைக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியாத நிலையில், அவரது பெயர் பிரான்சில் உள்ள Vimy Memorial-ல் நினைவுகூரப்பட்டு வருகிறது.
சவுத்தாம்ப்டனில் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம், குடும்பத்தினருக்கு இன்னும் ஒரு முடியாத வரலாறாகவே உள்ளது.
ட்ரான்டரின் குடும்ப உறவினரான அலிசியா ட்ரெல்போர்ட், அவர் வீட்டிற்கு எழுதிய கடிதங்கள், புகைப்படங்கள் மற்றும் அவரைச் சுற்றியுள்ள நினைவுகள் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
“அவர் எழுதிய கடிதங்களையும், புகைப்படங்களையும் பார்க்கும்போது, அவர் எங்களுடன் இன்னும் பேசுகிறார் போல உணர்கிறோம். ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அவரது கதை நிறைவு பெறாமல் உள்ளது,” என குடும்பத்தினர் உணர்ச்சியுடன் கூறியுள்ளனர்.
தற்போது இந்த தேடல் முயற்சிக்காக, அகாடியா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் ஆரோன் டெய்லரின் உதவியை குடும்பத்தினர் நாடியுள்ளனர். போரில் காணாமல் போன வீரர்களின் உடல்களைத் தேடும் பணியில் அனுபவம் கொண்டவர் டாக்டர் டெய்லர்.
போர் வரைபடங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் உள்ளூர் ஆய்வுகளின் அடிப்படையில், பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு வயல்வெளி பகுதியில் ட்ரான்டரின் உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
முதற்கட்டமாக, Ground-Penetrating Radar உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் அந்த இடத்தில் புவியியல் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம் கல்லறை போன்ற அமைப்புகள் உள்ளதா என்பதை கண்டறிய முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த முயற்சிக்கான முதல் கட்ட ஆய்விற்கு பெரும் செலவு தேவைப்படும் நிலையில், குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டாக்டர் டெய்லர், “முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் மற்றும் கொரியப் போரில் காணாமல் போன ஆயிரக்கணக்கான கனடிய ராணுவ வீரர்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளனர். அவர்களை தேடும் தொழில்நுட்பமும், அறிவும் இப்போது நமக்குக் கிடைக்கிறது,” என கூறியுள்ளார்.
போரில் உயிர் தியாகம் செய்தும், இன்னும் வீடு திரும்பாத கனடிய வீரர்களை தேடும் பணியை மத்திய அரசு முன்னின்று நடத்த வேண்டும் என்பதே ட்ரான்டர் குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.
அரசாங்கத்திடம் இருந்து தெளிவான நடவடிக்கை கிடைக்காத நிலையிலும், தங்கள் குடும்பப் பெரியவரின் உடலை கண்டுபிடித்து, உரிய மரியாதையுடன் கனடாவிற்கு கொண்டு வருவோம் என்ற உறுதியுடன் அலிசியா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.