கனடாவின் Saskatchewan மாகாணத்தில், குறிப்பாக சாஸ்கடூன் பகுதியில் வசிக்கும் மக்களை குறிவைத்து, போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்துமாறு கூறும் போலி குறுஞ்செய்திகள் பரவி வருவதாக சாஸ்கடூன் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவல்துறை அதிகாரி ஒருவர் அனுப்புவது போல தோன்றும் இந்த குறுஞ்செய்திகளில், பெறுநருக்கு Provincial Court traffic violation இருப்பதாகவும், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. பின்னர், அபராதத்தை உடனடியாக செலுத்துவதற்காக ஒரு இணையதள இணைப்பையும் குறுஞ்செய்தியில் சேர்த்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சாஸ்கடூன் காவல்துறை, எந்தவொரு கட்டணத்தையும் செலுத்துமாறு பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பாது என தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, இவ்வாறான குறுஞ்செய்திகள் முற்றிலும் மோசடி முயற்சிகள் எனவும், மக்கள் அவற்றை புறக்கணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய குறுஞ்செய்திகள் வந்தால், அதில் உள்ள எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். பணம் செலுத்த வேண்டாம். தனிப்பட்ட தகவல்கள் அல்லது வங்கி விவரங்களை பகிர வேண்டாம். அந்த எண்ணை உடனடியாக block செய்து, குறுஞ்செய்தியைப் புறக்கணிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடியால் பண இழப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது தனிப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டிருந்தாலோ, உடனடியாக சாஸ்கடூன் காவல்துறையை 306-975-8300 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
மேலும், இத்தகைய மோசடி குறுஞ்செய்திகளை Canadian Anti-Fraud Centre-இலும் பதிவு செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.