Reading Time: < 1 minute

கனடிய அரசாங்கம் ஸ்வீடனிடம் விமானங்களை கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது.

Tamil Business Directory

கனடிய தயாரிப்பு ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி ஸ்வீடனில் உருவாக்கப்பட்டுள்ள அதிநவீன வான்வழி கண்காணிப்பு அமைப்பான ‘குளோபல்ஐ’ (GlobalEye) விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் கனடா ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

‘குளோபல்ஐ’ என்பது ஸ்வீடிஷ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனமான ‘சாப்’ உருவாக்கிய வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பாகும்.

இந்த அதிநவீன ரேடார் அமைப்பு, கனடாவின் ‘பாம்பார்டியர்’ நிறுவனத்தின் ‘குளோபல் 6500’ ரக கார்ப்பரேட் ஜெட் விமானத்துடன் இணைக்கப்பட்டு, அதனை ஒரு அதிநவீன உளவு விமானமாக மாற்றுகிறது.

கனடாவின் பெருநிறுவன பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறை தலைவர்கள் நிறைந்திருந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

திட்டமிடப்பட்டுள்ள ஒட்டுமொத்த ‘குளோபல்ஐ’ விமானங்களின் எண்ணிக்கையில், குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் அடுத்த 15 ஆண்டுகளில் கனடாவிலேயே தயாரிக்கப்படுவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் முன்னெடுத்து வருகிறது.

இந்த ஒப்பந்தம் முழுமையாக கையெழுத்தானதும், மாண்ட்ரியல் மற்றும் டொராண்டோவில் உள்ள தனது ஆலைகளில் பாம்பார்டியர் நிறுவனம் குறைந்தபட்சம் 40 விமானங்களை உற்பத்தி செய்யக்கூடும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கனடாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கணினித் துறை சார்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது. தேசிய பாதுகாப்புத் துறை 5 பில்லியன் டொலருக்கும் அதிக செலவில் ஆறு ‘குளோபல்ஐ’ அமைப்புகளை வாங்க ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.