Reading Time: < 1 minute

பிரம்டனில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பாரதூரமான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 58 வயது பெண் ஒருவர், சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்து விட்டதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

நெடுஞ்சாலை 410 மற்றும் Sandalwood Parkway East அருகே, Checkerberry Crescent மற்றும் Serenity Lane பகுதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து, கடந்த 16ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4:30 அளவில் குறித்த அந்தப் பெண் அதிகாரிகளால் மீட்கப்பட்டார்.

காவல்துறையினர் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அந்தப் பெண் பலத்த அடி காயங்களுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று புதன்கிழமை காலையில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள், குறித்த அந்தப் பெண்ணின் கணவரான 64 வயது நபரை கொலை முயற்சிக் குற்றச்சாட்டில் கைது செய்திருந்தனர். தற்போது அந்தப் பெண் உயிரிழந்துவிட்ட நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அதிகரிக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தற்போது மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு விசாரணை அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த ஆண்டில் பீல் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள இருபதாவது கொலைச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.