டொராண்டோவில் சந்து ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்: டொராண்டோ நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள வீதி ஒன்றில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக டொராண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் தகவலின்படி, எக்லிண்டன் அவென்யூ மற்றும் கீல் ஸ்ட்ரீட் சந்திப்புப் பகுதியில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாகக் கிடைத்த அழைப்பையடுத்து, மீட்புக் குழுவினர் அங்கு விரைந்தனர்.
அங்குள்ள ஒரு சந்துப் பகுதியில் மயங்கிக் கிடந்த ஒரு நபரை அதிகாரிகள் மீட்டனர். அவருக்கு உடனடியாக முதலுதவி மற்றும் உயிர்காக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக டொராண்டோ காவல்துறை ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து டொராண்டோ காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், “தற்போதைய சூழ்நிலையில் இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுகிறது.
அதிகாரிகள் சம்பவ இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சோதனையிட்டு வருகின்றனர். எனினும், மரணத்திற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.