டொராண்டோவில் உள்ள வாகன நிறுத்த மீட்டர்களில் போலி QR குறியீடுகளை ஒட்டி பொதுமக்களிடம் பண மோசடி நடைபெற்று வருவதாக Toronto Police Service எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மைய வாரங்களில் இத்தகைய மூன்று புகார்கள் பதிவாகியுள்ளதாகவும், சம்பவங்கள் குறித்து நிதி குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் Parking fee செலுத்துவதற்காக QR Code-ஐ scan செய்யும் போது, அது உண்மையான கட்டண இணையதளம் போல தோன்றும் போலி தளத்திற்கு வழிநடத்துகிறது. அங்கு 7 டாலர் கட்டணம் செலுத்துவதாக நினைத்து தங்கள் தகவல்களை பதிவு செய்யும் நபர்களின் வங்கி கணக்கிலிருந்து சுமார் 2,000 டாலர் வரை திருடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, Bike Share Toronto நிறுவனமும் இதேபோன்ற மோசடி குறித்து தனது பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மிதிவண்டிகளில் உள்ள அதிகாரப்பூர்வ QR குறியீடுகளின் மேல் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும், எந்த சூழலிலும் QR Code மூலம் நேரடியாக பணம் செலுத்தக் கேட்பதில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, Parking meters அல்லது பொது இடங்களில் உள்ள QR குறியீடுகளை பயன்படுத்தும் முன் அவை சிதைக்கப்பட்டுள்ளதா, புதிதாக ஒட்டப்பட்டுள்ளதா என்பதை கவனமாகச் சரிபார்க்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், சந்தேகத்திற்குரிய QR குறியீடுகளை தவிர்த்து, எப்போதும் அதிகாரப்பூர்வ App அல்லது இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.