செயல்பாட்டில் இல்லாத மத்திய அரசு மானியத் திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி, வீடு வீடாகச் சென்று மோசடியில் ஈடுபட முயன்றதாக டொராண்டோவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரை நார்த் பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 20ஆம் திகதி காலை, நார்த் பே பிராந்தியத்தின் Birch Haven பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்ற குறித்த நபர், தன்னை முன்னணி எரிசக்தி நிறுவனத்தின் பிரதிநிதி என அறிமுகப்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர், கனடா அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் “வீட்டு எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தின்” கீழ் தாம் சான்றளிக்கப்பட்டவர் எனக் கூறியதுடன், வீட்டு உபயோகப் பொருட்களை மாற்றினால் 5,000 டொலர் முதல் 10,000 டொலர் வரை அரசு மானியம் பெற்றுத் தர முடியும் என வீட்டில் வசிப்பவர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் குறிப்பிட்ட மத்திய அரசின் அந்த திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே நிறைவடைந்து, தற்போது செயல்பாட்டில் இல்லை என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது மோசடி முயற்சி தொடர்பான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்ற மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, வீடு தேடி வரும் நபர்கள் ஏதேனும் நிறுவனம் அல்லது அரசு அமைப்பின் பெயரில் பேசினால், அந்த நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், உடனடியாக முடிவு எடுக்குமாறு அழுத்தம் கொடுக்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும், வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு எண்கள் அல்லது தனிப்பட்ட அடையாள ஆவணங்களை அறிமுகமில்லாத நபர்களிடம் வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரிய அளவிலான கொள்முதல் அல்லது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன், குடும்ப உறுப்பினர் அல்லது நம்பகமான நண்பர்களுடன் ஆலோசிக்குமாறும், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து உடனடியாக உள்ளூர் பொலிஸாருக்கும் கனடிய மோசடி தடுப்பு மையத்திற்கும் தகவல் தெரிவிக்குமாறும் நார்த் பே பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.