Reading Time: < 1 minute

கனடாவின் கவார்த்தா லேக்ஸ் பகுதியில் நிகழ்ந்த அடுத்தடுத்த வாகன விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

சனிக்கிழமை இரவு, ஒமேமி நகரில் உள்ள நெடுஞ்சாலை 7 மற்றும் நியூ ஹைட்ஸ் சாலை சந்திப்பில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு பயணிகள் கார் ஆகியவை ஒன்றோடொன்று மோதி இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

காரை செலுத்திச் சென்ற பீட்டர்பரோவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற டன்சர்ச் பகுதியைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஆகிய இருவரும் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்றொரு மோட்டார் சைக்கிளை செலுத்திய பாரி (Barrie) பகுதியைச் சேர்ந்த 65 வயது நபர், ஆபத்தான நிலையில் ஹெலிகாப்டர் மூலம் டொராண்டோ சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய மற்ற இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சட்பரி (Sudbury) பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 36 வயதுடைய ஆண்கள் ஆவர். இதில் 30 வயது நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக டொராண்டோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

36 வயது நபருக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். விபத்தையடுத்து அந்தச் சாலை தற்காலிகமாக மூடப்பட்டு, மீட்புப் பணிகளுக்குப் பின் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து நடந்த நேரத்தில் அந்த வழியே சென்றவர்கள், தங்களிடம் ஏதேனும் தகவல் அல்லது டேஷ்கேம் வீடியோ பதிவுகள் இருந்தால் உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.