Reading Time: < 1 minute

கனேடியர்களை இலக்குவைத்து தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்படும் புதிய பண மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil Business Directory

முன்னரும் இவ்வாறு கனேடிய வருமான வரித்துறைக்கான வரிகளை வசூல் செய்வதாக தெரிவித்து கனேடியர்களிடம் இருந்து மில்லியன் கணக்கான டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக காவல்துறையினர் போல் நடித்து மோசடி முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் உள்ளூர் காவல்துறை போல தம்மைக் கூறிக்கொள்ளும் நபர்கள் இவ்வாறு தொலைபேசி ஊடாக மோசடியில் ஈடுபடுவதாகவும், காவல்துறையிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது என்பதனை நம்பவைக்கும் வகையில், மக்களின் தொலைபேசிகளில் காவல்துறை தொலைபேசி இலக்கத்தில் இருந்து அழைப்பு வருவது போன்ற தொழில்நுட்பத்தை அவர்கள் கையாள்வதாகவும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள ரொரன்ரோ காவல்துறையினர், எந்த வேளையிலும் காவல்துறை தரப்பு அரசாங்கத்தின் சார்பாக மக்களிடம் இருந்து பணத்தை வசூலிப்பதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பணத்தையோ வரியையோ வருமான வரித்துறை சார்பில் வசூலிக்கும் செயற்பாட்டில் காவல்துறை ஒருபோதும் ஈடுபடுவதில்லை எனவும், கனேடிய வருமான வரித்துறை ஒருபோதும் இந்த முறையில் பணத்தை வசூலிப்பதில்லை எனவும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அந்த எச்சரிக்கையில் விபரித்துள்ளனர்.

கடந்த சில வாரங்களில் இவ்வாறான புதிய மோசடிச் சம்பவங்கள் சில இடம்பெற்றுள்ளதாகவும் ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஒரு தொகையினை உடனயாகச் செலுத்துமாறும், இல்லாவிட்டால் நாடுகடத்தப் படுவீர்கள் என்றும் மேசடியாளர்களால் அச்சுறுத்தப்பட்டதை அடுத்து ஒருவர் 1,200 டொலர்களைச் செலுத்தியுள்ளதாகவும், அதேபோல பெண் ஒருவரிடம் அவரின் சமூக காப்புறுதி இலக்கத்தைப் பயன்படுத்தி, உடனடியாக பணத்தைச் செலுத்தாவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தி அவரிடம் இருந்து ஆயிரம் டொலர்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரொரன்ரோ காவல்துறையினர் விபரம் வெளியிட்டுள்ளனர்.

கனேடிய வருமான வரித்துறையினர் இவ்வாறு தொலைபேசி ஊடாக அழைத்து எச்சரிக்கும் பாணியில் அல்லது அச்சுறுத்தும் வகையில் இவ்வாறு பணம் கோருவதில்லை என்பதையும், அவர்கள் ஒருபோதும் கடனட்டைத் தகவல்களையோ, வங்கிக் கணக்குத் தகவல்களையோ, சமூக காப்புறுதி இலக்கங்களையோ கோருவதில்லை என்பதையும் காவல்துறையினர் தெளிவு படுத்தியுள்ளனர்.

அத்துடன் ஒருபோதும் தனிப்பட்ட தகவல்கள் மின்னஞ்சல் மூலமாகவோ, குறுந்தகவல் மூலமாகவோ கோரப்பட மாட்டாது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இவ்வாறான சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் கிடைத்தால், உடனடியாக அந்த அழைப்பினைத் துண்டித்துவிடுமாறும் காவல்துறையினர் பொதுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.