Reading Time: < 1 minute

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு மீண்டும் பதவியேற்றது முதல் பல்வேறு வர்த்தக வரிகளை விதித்து வரும் நிலையில், தற்போது அதன் முக்கிய வர்த்தகப் பங்காளியான கனடா மீது மேலும் 10% கூடுதல் இறக்குமதி வரியை விதிக்க டிரம்ப் நிர்வாகம் புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது.

Tamil Business Directory

கட்டாய உழைப்பைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, கனடா உள்ளிட்ட பல நாடுகளின் தயாரிப்புகளுக்கு இந்த வரியை விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.

1974 ஆம் ஆண்டின் அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் ‘பிரிவு 301’-இன் கீழ் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த 100 பக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கட்டாய உழைப்பு மூலம் உற்பத்தியாகும் பொருட்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதைத் தடை செய்யும் விதியை கனடா முறையாக அமல்படுத்தவில்லை என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இதன் காரணமாக, ஏற்கனவே அமெரிக்காவின் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடா, தற்போது மேலும் 10 சதவீத கூடுதல் வரி விதிப்பை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கனடாவுடன் சேர்த்து மெக்சிகோ, தைவான் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கும் இந்த 10% வரி விதிக்கப்படவுள்ளது.

கனடா போன்ற எங்களின் மிக முக்கிய வர்த்தகப் பங்காளிகள் கட்டாய உழைப்பு இறக்குமதியைத் தடுக்கத் தவறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இது உலக வர்த்தகக் களத்தில் அமெரிக்கத் தொழிலாளர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகிறது” என அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தக்காளி, வாழைப்பழம், காபி மற்றும் குறிப்பிட்ட சில ஆடைகள், உலோகங்கள் போன்ற முக்கியப் பொருட்களுக்கு இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் அல்லது குறைவான வரியே விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி டிரம்ப் வரிகளை விதிப்பதில் உள்ள உச்ச நீதிமன்றக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டே இந்தச் சிறப்புப் பிரிவின் கீழ் விசாரணையை நடத்தியுள்ளார்.

எனினும், இந்த புதிய வரிகள் உடனடியாக நடைமுறைக்கு வராது. இது பொதுமக்களின் கருத்துக்கேற்ப மறுஆய்வு செய்யப்பட்டு, வரும் ஜூலை 7 ஆம் திகதி முதல் பொது விசாரணை தொடங்கப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக் காலமாக அமெரிக்கா விதித்து வரும் தொடர் வரிகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த புதிய நகர்வு கனடா வர்த்தகத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.