சிறுவர்களை இலக்கு வைத்து இணையவழியில் பாலியல் அச்சுறுத்தல் மற்றும் சுரண்டல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட றொரண்டோவைச் சேர்ந்த ரமணன் பத்மநாதன் என்ற 40 வயது நபருக்கு, அமெரிக்க நீதிமன்றம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
அறிக்கையின்படி, சுமார் 145 சிறுவர்கள் இந்த இணையவழி சுரண்டல் திட்டத்தில் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் சமூக வலைத்தளங்களில் போலிக் கணக்குகளைப் பயன்படுத்தி, சிறுவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களை மிரட்டியதாக வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் ஏற்கனவே கனடாவில் அனுபவித்து வரும் 12 ஆண்டு சிறைத்தண்டனை முடிந்த பின்னர், அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள 33 ஆண்டு சிறைத்தண்டனை அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறைத்தண்டனை முடிந்த பின்னர் 10 ஆண்டுகள் அவர் பொலிஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு றொரண்டோ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் அமெரிக்க அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இணையவழி குற்றங்கள், குறிப்பாக சிறுவர்களை இலக்கு வைக்கும் அச்சுறுத்தல் மற்றும் சுரண்டல் சம்பவங்கள் குறித்து பெற்றோர், பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.