கனடாவின் பிராம்ப்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக குறைந்தது இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சண்டல்வுட் பார்க்வே மற்றும் கிரவுன் விக்டோரியா டிரைவ் சந்திப்பிற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்றது என பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிக் காயங்களுடன் இருந்த ஒரு நபரைக் கண்டறிந்தனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அங்கேயே அறிவிக்கப்பட்டது. நடுத்தர உடலமைப்புடன், கருமையான ஆடைகளை அணிந்திருந்த இரண்டு ஆண் சந்தேக நபர்கள், நான்கு கதவுகள் கொண்ட கருப்பு நிற செடான் (sedan) ரக காரில் தப்பியோடியதாக பீல் பிராந்திய காவல்துறையின் ஊடகத் தொடர்பு அதிகாரி டைலர் பெல் (Tyler Bell) தெரிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு வீட்டிற்குள்ளேயே நடந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
“விசாரணை தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. தகவல்கள் மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளன.
இந்த சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எனவே, அவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை அளிக்கும் வகையில் தற்போதைக்கு கூடுதல் விபரங்களை வெளியிட முடியாது” என்று பெல் கூறினார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.