கனடாவில் வெறுப்புணர்வினால் தூண்டப்படும் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் ‘சட்டமூலம் சி-9’ நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘வெறுப்புணர்வை முறியடிக்கும் சட்டம்’ என அழைக்கப்படும் இந்த சட்டமூலத்தின் கீழ், பொதுவிடங்களில் வெறுப்பைத் தூண்டும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படும் சில அடையாளங்கள் தொடர்பாக குற்றவியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.
இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக, ‘தூக்குக்கயிறு’ கனடாவில் தடைசெய்யப்பட்ட வெறுப்பு அடையாளங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கனேடிய செனட் சபை இந்த சட்டமூலத்தில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வந்து, தூக்குக்கயிறை தடைசெய்யப்பட்ட அடையாளங்களின் பட்டியலில் சேர்த்தது. இதையடுத்து, சட்டமூலம் நாடாளுமன்ற செயல்முறையில் முன்னேறி நிறைவேற்றப்பட்டது.
கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறி, அச்சுறுத்தல் மற்றும் வன்முறை வரலாற்றுடன் தொடர்புடைய மிகக் கடுமையான அடையாளமாக தூக்குக்கயிறு கருதப்படுவதால், இந்த மாற்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கூறப்படுகிறது.
கறுப்பின மக்களுக்கான நிதி அமைப்பு இந்த திருத்தத்தை வரவேற்றுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019ஆம் ஆண்டிலிருந்து கனடாவில் வெறுப்புணர்வுக் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும், இதில் கறுப்பின கனேடியர்கள் அதிகளவில் இலக்காக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரி கிரெய்க் வெலிங்டன், “கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறி அச்சுறுத்தலின் மிக மோசமான அடையாளங்களில் ஒன்றான தூக்குக்கயிறு, இந்த சட்டமூலத்தில் சேர்க்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும்,” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இடைவெளியை கவனித்து நடவடிக்கை எடுத்த நீதியமைச்சர் சீன் பிரேசர், அவரது குழுவினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய சட்டமூலம், கனடாவில் வெறுப்புணர்வு, இனவெறி மற்றும் மத-கலாச்சார இடங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்தும் முக்கியமான சட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.