Reading Time: < 1 minute

ரொரன்ரோ அலென் கார்டன்ஸ் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

Tamil Business Directory

Jarvis Streetஇல் அமைந்துள்ள குறித்த அந்த வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11:43 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், வீட்டின் கீழ்த் தளத்தில் இருந்து கூரைப் பகுதி வரை முழுவதுமாக எரிந்து விட்டதாகவும், எனினும் வீடு கைவிடப்பட்ட நிலையில் யாரும் வசிக்காது இருந்த காரணத்தினால் இநத தீப்பரவலின் போது எவரும் காயமடையவில்லை என்றும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், அந்தப் பகுதிக்கான நீர் வினியோக அளவினை அதிகரிக்குமாறு நகர நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக வீட்டின் மேற்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு முயற்சியினால் தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் வந்துள்ள போதிலும், இன்னமும் சம்பவ இடத்தில் உள்ள தீயணைப்பு படையினர், ஆங்காங்கே தீ அணையாது காணப்படும் பகுதிகளை தேடி அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த அந்த வீட்டின் கட்டுமானம் பலம் இழந்து போயிருக்கும் என்பதால், ரொரன்ரோ நகர நிர்வாகத்தின் பொறியியல் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் உடனடியாக கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.