Reading Time: < 1 minute

கனடா மீது 25 சதவீத வரி விதிப்பை அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அழுத்ததிற்கு ஒருபோதும் கனடா அடிபணியப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்த நிலையில் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

லிபரல் கட்சியின் தலைவரான ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் கனடாவின் பிரதமராகப் பதவி வகித்தார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் 59 வயதான மார்க் கார்னி 1 இலட்சத்து 31ஆயிரத்து 674 வாக்குகள் பெற்று 85.9 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கிறிஸ்டியா பிரீலாண்ட் 11,134 வாக்குகளையும், கரீனா கோல்ட் 4,785 வாக்குகளையும் பெற்றனர்.

இதன் மூலம் லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24ஆவது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கனேடிய பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் மார்க் கார்னி விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார். குறித்த உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது” டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை அமெரிக்கப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை கனடா அரசாங்கமும் கைவிடாது. கனேடிய அரசு சரியான பாதையிலேயே செல்கிறது.

நமக்கு அமெரிக்கா உரிய மரியாதை கொடுத்து, நம்பகத்தன்மை வாய்ந்த, நியாயமான வர்த்தகத்தை உறுதி செய்யும் வரை நாம் விதித்த வரி அமுலில்தான் இருக்கும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.