கனடாவில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுச் சம்பவங்கள் (Antisemitism) முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக யூத மனித உரிமை அமைப்பான பி’நாய் பிரித் கனடா (B’Nai Brith Canada) தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிந்தைய புவிசார் அரசியல் பதற்றங்கள் இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
கனடாவில் யூத எதிர்ப்பு என்பது ஒரு தேசிய நெருக்கடியாக மாறியுள்ளது என பி’நாய் பிரித் கனடாவின் ஆராய்ச்சி துறை இயக்குனர் ரிச்சர்ட் ராபர்ட்சன் கூறியுள்ளார்.
இது முன்னேற்றமடைவதற்குப் பதிலாக மோசமடைந்து வருகிறது எனவும் இந்த புள்ளிவிவரங்கள் திகைப்பூட்டுவதாகவும், புறக்கணிக்க முடியாத ஒன்றாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
1982-ம் ஆண்டு முதல் யூத எதிர்ப்புச் சம்பவங்களை இந்த அமைப்பு பதிவு செய்யத் தொடங்கியது. அதன்பிறகு தற்போதுதான் சமூகம் இவ்வளவு பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கனடா புள்ளியியல் துறையின் (Statistics Canada) தரவுகளின்படி, கடந்த ஆறு ஆண்டுகளாக அனைத்து வகையான வெறுப்புக் குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதில் யூத மற்றும் முஸ்லிம் சமூகங்களே அதிகளவில் இலக்காக்கப்படுகின்றன. வெறுப்புக் குற்றங்களுக்கு எதிராக எளிதாக வழக்குப் பதிவு செய்யும் வகையில் ‘வெறுப்புக்கு எதிரான போராட்டம்’ (Bill C-9) என்ற புதிய சட்டமூலத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தற்போது செனட் சபையின் ஆய்வில் உள்ளது. இஸ்ரேல் அரசாங்கத்தையோ அல்லது அதன் சர்வதேச நடவடிக்கைகளையோ விமர்சிப்பது யூத எதிர்ப்பு ஆகாது என்று ராபர்ட்சன் விளக்கினார்.
ஆனால், புவிசார் அரசியல் நிலைப்பாடுகளைக் காரணம் காட்டி வெறுப்புணர்வைத் தூண்டுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் சுட்டிக்காட்டினார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.