Reading Time: < 1 minute

பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி நடித்த திரைப்படம் ஒன்றில், குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்காக கதாநாயகன் அரபு நாடொன்றுக்கு வேலைக்குச் செல்கிறார். இளம் வயது மனைவியையும் குடும்பத்தையும் பிரிந்து வாழும் அவர், தன் இளமையை உழைப்பில் கழித்து, குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து அனுப்புகிறார்.

Tamil Business Directory

பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து, குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்த பின்னர், 50 வயதில் அவர் தாய்நாட்டிற்கு திரும்புகிறார். ஆனால், முன்பு விடுமுறைக்கு வரும்போது கிடைத்த அன்பும் வரவேற்பும் இனி இல்லை என்பதை உணர்கிறார். குடும்பத்துக்கு தன்னைவிட தனது பணம்தான் முக்கியம் என்ற உண்மை அவரை மனவேதனையிலும் ஏமாற்றத்திலும் ஆழ்த்துகிறது. இறுதியில், அவர் மீண்டும் வேலை செய்த அதே வெளிநாட்டிற்கே திரும்பிச் செல்கிறார்.

அதேபோன்ற உணர்வை வெளிப்படுத்தும் ஒரு உண்மை அனுபவம், தற்போது சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கல்வி கற்க கனடா சென்ற இந்திய இளைஞர் ஒருவர், படிப்பை முடித்த பின்னர் நிரந்தர குடியிருப்பு அனுமதி கிடைக்காததால் இந்தியாவிற்கே திரும்ப முடிவு செய்துள்ளார்.

கனடாவில் இருந்த காலத்தில், கல்விக் கடன் பெற்று படித்ததுடன், அந்தக் கடனையும் தானே செலுத்தி, குடும்பத்திற்கும் பணம் அனுப்பியதாக அவர் கூறியுள்ளார். தற்போது இந்தியாவுக்கு திரும்பிய பின்னரும் தனது செலவுகளை தானே கவனித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், கனடாவில் இருந்தபோது குடும்பத்தினர் தன்னை நடத்திய விதத்துக்கும், தற்போது இந்தியாவுக்கு திரும்பிய பின் தன்னை நடத்தும் விதத்துக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக அந்த இளைஞர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

“நீ போதுமான அளவில் முயற்சி செய்யவில்லை. அதனால்தான் உனக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கவில்லை. நீ கனடா சென்றதே வீண். கனடாவுக்குப் போயிருக்கவே கூடாது. எல்லாம் வீண் செலவு” என தனது தாயாரே தன்னை குறை கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும், என்ன செய்வது என்று தெரியாமல் சமூக ஊடகத்தில் தனது அனுபவத்தை பகிர்ந்து ஆலோசனை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவரது பதிவைப் பார்த்த பலரும், அவருக்கு ஆதரவாக கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். வெளிநாடு செல்லும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தம், குடும்ப எதிர்பார்ப்பு, குடியேற்ற சவால்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகள் குறித்து இந்த பதிவு மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் வாழும் பலர், குடும்பத்திற்காக தங்கள் வாழ்க்கையின் முக்கியமான ஆண்டுகளை அர்ப்பணித்தாலும், அவர்கள் மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்பும் போது எதிர்கொள்ளும் மனநிலையை இந்த சம்பவம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.