கனடாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அச்சமூட்டும் சிறைச்சாலைகளில் ஒன்றான ‘கிங்ஸ்டன் பெனிடென்ஷியரி’ (Kingston Penitentiary) வளாகத்தை ஒரு பாரிய வீட்டுத் திட்டமாக மாற்றுவதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
கனடாவின் மிக மோசமான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிங்ஸ்டன் சிறைச்சாலை வளாகத்தில், சுமார் 700 குடியிருப்புகளைக் கொண்ட ஒரு பிரம்மாண்ட வீட்டுத் திட்டத்தை உருவாக்கப் பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் கனடா (PSPC) திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகமான சிபிசி (CBC) செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின்படி, இந்த 10 ஹெக்டேர் பரப்பளவிலான வரலாற்றுச் சின்னத்தின் பின்பகுதியைத் தரைமட்டமாக்கி, ஒன்டாரியோ ஏரியைப் பார்த்தவாறு உயர்ந்த கட்டிடங்களை (High-rise buildings) உருவாக்க அரசு உத்தேசித்துள்ளது.
உள்நாட்டு மின்னஞ்சல்களில் இந்தத் திட்டம் “தூங்கும் அரக்கனை” (Sleeping giant) எழுப்பும் முயற்சி என வர்ணிக்கப்பட்டுள்ளது.
1835 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சிறைச்சாலை, கனடா ஒரு நாடாக உருவாவதற்குப் பல தசாப்தங்களுக்கு முன்னரே இயங்கி வந்தது.
சீரியல் கில்லர் பால் பெர்னார்டோ மற்றும் ரசல் வில்லியம்ஸ் போன்ற கனடாவின் மிக மோசமான குற்றவாளிகள் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர்.
அதன் கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்பால் 1990 இல் இது ‘தேசிய வரலாற்றுச் சின்னம்’ என அறிவிக்கப்பட்டது.
2013 இல் இது நிரந்தரமாக மூடப்பட்டது.
இந்தத் திட்டம் குறித்து கிங்ஸ்டன் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் கெரட்சன் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.
சிறைச்சாலை அருங்காட்சியகத்தின் வரலாற்றாசிரியர் டேவ் செயின்ட் ஓங்கே கூறுகையில், “இந்த இடம் கனடாவின் சிறைச்சாலைத் துறையின் பிறப்பிடமாகும்.
இங்கு மனித வாழ்வின் அனைத்து உணர்வுகளும் புதைந்துள்ளன,” என்றார்.
இத்திட்டம் கிங்ஸ்டனின் பாரம்பரியத்தை அழிப்பதுடன், சுற்றுலா மற்றும் திரைப்படப் படப்பிடிப்புகள் மூலம் கிடைக்கும் மில்லியன் கணக்கான வருவாயைப் பாதிக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், நாட்டில் நிலவும் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய இத்தகைய பெரிய இடங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசுத் தரப்பு ஆர்வமாக உள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.