மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழல் உலகளாவிய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் தாக்கம் தற்போது கனடாவின் விமானப் போக்குவரத்து துறையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது.
கனடாவின் முக்கிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான WestJet, தனது பயணக் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. எரிபொருள் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ஏப்ரல் 8 முதல் முன்பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு அதிகபட்சமாக 60 டாலர் வரை கூடுதல் எரிபொருள் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், விமான சேவைகளிலும் குறைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏப்ரல் மாதத்தில் 406 விமானப் பயணங்களும், மே மாதத்தில் சுமார் 1,000 விமானப் பயணங்களும் ரத்து செய்யப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் சுமார் 1.5% சேவை குறைப்பையும், மே மாதத்தில் 3 முதல் 4% வரை சேவை குறைப்பையும் குறிக்கிறது.
எரிபொருள் செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், குறைந்த பயணிகள் தேவையுள்ள வழித்தடங்களில் சேவைகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. இந்த மாற்றங்களால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மாற்றங்கள் ஊழியர் பணிநீக்கம் போன்ற எந்தவொரு கடுமையான நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.




