Reading Time: < 1 minute

இன்று காலை வேளையில் நெடுஞ்சாலை 401இல் கார் ஒன்று பேரூந்துடன் மோதுண்டு தீப்பிடித்து எரிந்ததில், பாரதூரமான காயங்களுக்கு உள்ளான காரின் சாரதி உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டு உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

நெடுஞ்சாலை 401இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், போர்ட் யூனியன் வீதிப் பகுதியில் இன்று காலை சுமார் எட்டு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மிகவும் வேகமாக பயணித்த குறித்த அந்தக் கார் பேரூந்தின் பின்னால் சென்று மோதி பின்னர் வீதியோரத் தடுப்புடனும் மோதித் தீப்பற்றிக் கொண்டதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது காரின் சாரதி இருக்கைப் பட்டியை அணிந்திருக்கவில்லை எனவும், காரிலிருந்து சாரதி வெளியே கொண்டுவரப்பட்ட பின்னரே அது தீப்பற்றிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான போது பேரூந்தில் பயணிகள் எவரும் இருக்கவில்லை எனவும், இந்தச் சம்பவத்தின் போது குறித்த அந்தக் காரின் சாரதியைத் தவிர வேறு எவரும் காயமடையவில்லை என்றும் தெரிவித்துள்ள காவல்துறையினர், விபத்து இடம்பெற்ற அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளை மட்டுப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.