கனடாவின் நீண்டகால கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Marilyn Gladu, தற்போது லிபரல் கட்சியில் இணைந்துள்ளார்.
லிபரல் கட்சி வெளியிட்ட அறிக்கையில், கிளாடு புதன்கிழமை காலை (April 8, 2026) அதிகாரப்பூர்வமாக தங்கள் அணியில் இணைந்ததாக தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் பிரதமர் Mark Carney தலைமையிலான அரசின் புதிய உறுப்பினராக சேர்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“கடந்த ஆண்டு கனடா இதுவரை சந்தித்ததிலேயே மிக வேறுபட்ட காலமாக இருந்தது. மக்கள் தெளிவாக ஒரு வலுவான தலைமைத்துவத்தையும், சுயாதீனமான மற்றும் வலுவான கனடிய பொருளாதாரத்தை உருவாக்கும் திட்டத்தையும் விரும்புகிறார்கள்,” என கூறியுள்ளார்.
மேலும், “அதனால்தான் நான் பிரதமர் மார்க் கார்னி மற்றும் கனடாவின் புதிய அரசாங்கத்துடன் இணைவதை தீர்மானித்துள்ளேன்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிளாடு, நீண்ட காலமாக கன்சர்வேட்டிவ் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து பல எதிர்க்கட்சி பதவிகளை வகித்தவர். 2020ஆம் ஆண்டு அவர் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட முயன்றார். ஆனால் கட்சி தகுதி பிரச்சினைகளால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
2015 முதல் அவர் ஒன்டாரியோவின் தென்மேற்கு பகுதியான Sarnia—Lambton—Bkejwanong தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். இந்த பகுதி கனடாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் இடமாகும். பெட்ரோ-கெமிக்கல் தொழில் அப்பகுதியின் முக்கிய வேலைவாய்ப்பாகவும் உள்ளது.
2021ஆம் ஆண்டு, COVID-19 தடுப்பூசி குறித்து அவர் தெரிவித்த சில கருத்துகளுக்கு பின்னர் மன்னிப்பு கேட்டிருந்தார். CTV Question Period நிகழ்ச்சியில் பேசிய அவர், COVID-19 ஐ 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பரவிய போலியோ நோயுடன் ஒப்பிட்டிருந்தார். மேலும், கொரோனா அதே அளவிலான அபாயத்தை ஏற்படுத்தவில்லை எனவும் கூறியிருந்தார்.

கடந்த சில மாதங்களில் லிபரல் கட்சியில் இணையும் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு லிபரல் கட்சி பெரும்பான்மை நிலையை அடைய 172 இடங்கள் தேவையான நிலையில் தொடர்ந்து அந்த எல்லையை நெருங்கி வருகிறது. தற்போதைய நிலையில் பல முன்னாள் அமைச்சர்கள் ராஜினாமா செய்தும், புதிய உறுப்பினர்கள் இணைந்ததாலும் லிபரல் கட்சி 171 இடங்களுடன் உள்ளது.




