கனடாவின் பிராம்ப்டன் பகுதியிலுள்ள சிங்குவாசி பூங்காவில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் கடந்த மார்ச் 20 அன்று சமூக விரோதிகளால் சிதைக்கப்பட்டது. நினைவிடத்தின் மீது வெறுப்புணர்வையும் அவதூறையும் தூண்டும் வகையிலான வாசகங்கள் தெளிக்கப்பட்டிருந்தன. இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட பீல் பிராந்திய காவல்துறையினர், தற்போது 14 வயதுடைய சிறுவன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன் மீது ஐயாயிரம் டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர் குற்றவியல் நீதிச் சட்டத்தின்படி அச்சிறுவனின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பீல் பிராந்திய காவல் கண்காணிப்பாளர் நிஷான் துரையப்பா, பொது இடங்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக சமூகங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடங்கள் மீதான வெறுப்புணர்வு குற்றங்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். வெறுப்புணர்வு குற்றத் தடுப்புப் பிரிவு விரைந்து செயல்பட்டு குற்றவாளியைக் கண்டறிந்ததற்காக அவர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.




