சர்வதேச மாணவர்களை இலக்கு வைத்து சுமார் 126,000 கனேடிய டொலர்கள் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், ஒன்ராறியோவைச் சேர்ந்த இருவர் மீது கனேடிய எல்லை பாதுகாப்பு முகமை குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
கனேடிய எல்லை பாதுகாப்பு முகமை வெளியிட்ட தகவலின்படி, ஒன்ராறியோவின் கேம்பிரிட்ஜ் நகரைச் சேர்ந்த Hardik Dave மற்றும் லண்டன் நகரைச் சேர்ந்த 35 வயதான Jainishkumar Patel ஆகியோர் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
Sarniaவில் உள்ள Lambton College-இல் கல்விக் கட்டணம் செலுத்தி, மாணவர்களுக்கு இடம் பெற்றுத்தருவதாகக் கூறி, சர்வதேச மாணவர்களிடமிருந்து பணம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் வாக்குறுதி அளிக்கப்பட்ட கல்வித் திட்டங்களில் சேர்க்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு போலியான சேர்க்கை ஆவணங்கள் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணை 2025 பிப்ரவரி மாதத்தில் Lambton College வழங்கிய தகவலின் அடிப்படையில் தொடங்கியதாக CBSA தெரிவித்துள்ளது. பின்னர், பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் வணிக இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, 2026 ஜூன் 2ஆம் திகதி இருவர்மீதும் மோசடி, போலி ஆவணங்களை பயன்படுத்துதல் மற்றும் குடிவரவு தொடர்பான தவறான தகவல் வழங்க ஆலோசனை செய்தல் உள்ளிட்ட மொத்தம் 12 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Hardik Dave, 2026 ஜூலை 10ஆம் திகதி ஒன்ராறியோ நீதிமன்றத்தின் லண்டன் அமர்வில் ஆஜராக உள்ளார். குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டியவை என CBSA குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், Jainishkumar Patel கனடாவை விட்டு தப்பியோடியிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர். அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் குடிவரவு விண்ணப்பதாரர்களை இலக்கு வைத்து நடைபெறும் இத்தகைய மோசடிகளை தடுப்பதற்காக சட்ட அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என கனேடிய எல்லை பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.