கனடாவின் கியூபெக் மாகாணத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட 51 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 61 வயதான ஒருவர் மீது முதல்தரக் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் சுஷ்மிதா பாஸ்கரன் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவரது உடல் கடந்த ஜூன் 22ஆம் திகதி, கியூபெக் நகருக்கு தெற்கே அமைந்துள்ள Lévis பகுதியில் உள்ள செமின் டெஸ் ஃபோர்ட்ஸ் சாலைக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சுஷ்மிதா காணாமல் போனதாக சில நாட்களுக்கு முன்னர் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கியூபெக் நகர பொலிஸாரும் Lévis பொலிஸாரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.
மரண விசாரணையின் முடிவில், சுஷ்மிதா கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை கியூபெக் நகர பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக Lévis நகரைச் சேர்ந்த மார்ட்டின் கேரியர் என்ற 61 வயதான நபர் கைது செய்யப்பட்டார். இவர் சுஷ்மிதாவின் முன்னாள் துணைவர் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மார்ட்டின் கேரியர் மீது ஆரம்பத்தில் உயிரற்ற உடலை அவமதித்ததாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், ஜூலை 3ஆம் திகதி அவர் மீது சுஷ்மிதா பாஸ்கரனை கொலை செய்ததாக முதல்தரக் கொலைக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, சுஷ்மிதா ஜூன் 19ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. உயிரற்ற உடலை அவமதித்த சம்பவம் ஜூன் 22ஆம் திகதி இடம்பெற்றதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.





Comments are closed, but trackbacks and pingbacks are open.