முறைகேடான செயல்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதை அடுத்து, கனடா வான்கூவரைச் சேர்ந்த முன்னாள் மசாஜ் தெரபிஸ்ட் சன்னா ஸ்டெய்னர் என்பவருக்கு, அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தனது உரிமத்தை மீண்டும் பெற விண்ணப்பிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சுகாதார நிபுணர்களின் கல்லூரி இந்த மாத தொடக்கத்தில் சன்னா ஸ்டெய்னருடன் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டது.
அதன்படி, அவர் மீதான முறைகேடுகள் குறித்து அவருக்கு முறையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இனி இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழியையும் அவர் அளித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 31, 2021 அன்று சன்னா ஸ்டெய்னர் தனது தொழில்முறைப் பதிவை புதுப்பிக்கத் தவறியிருந்தார். அதற்குப் பிறகு, ஜனவரி 10, 2022 அன்று நோயாளி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர் தனது சிகிச்சை அறையைத் தூய்மையாக வைத்திருக்கவில்லை என்றும், தொற்று மற்றும் நோய் பரவலைத் தடுப்பதற்கான போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
நோயாளியிடம் அதற்கான துல்லியமான காரணங்களை விளக்காமலும், ஒப்புதல் படிவத்தை மறுபரிசீலனை செய்யாமலும் அவரை வீடியோ எடுத்ததை ஸ்டெய்னர் ஒப்புக்கொண்டார்.
நோயாளியின் ஆரோக்கியத்திற்குப் பலன் தராத, தேவையற்ற சிகிச்சைகளை அவர் வழங்கியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சன்னாவின் இத்தகைய நடவடிக்கைகள் தங்களது தொழில்முறை மற்றும் நெறிமுறைக் கடமைகளுக்கு எதிரானது எனவும், இது பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைத்து, நோயாளிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.