கனடாவின் மொன்றியால் நகரில் உள்ள மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
மொன்றியாலின் வில்லரே-செயின்ட்-மிஷேல்-பார்க்-எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள 24வது அவென்யூவிற்கு அருகிலுள்ள 42வது தெருவில் சனிக்கிழமை காலை 7:30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அவசரப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
எட்டு குடியிருப்புகளைக் கொண்ட இந்த மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீப்பிடித்து, பின்னர் அது மூன்றாவது மாடிக்கும் வேகமாக பரவியதாக மொன்றியால் தீயணைப்புத் துறையின் ஊடகப் பேச்சாளர் பிரான்சிஸ் புளூரி தெரிவித்துள்ளார்.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டனர்.
காயமடைந்த நால்வரில் இருவர் சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டனர். மற்ற இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவசர மருத்துவ சேவைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் பெஞ்சமின் டான்செரோ-லெக்லெர்க் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிறுமி என்பதும், மற்றொருவர் 30 வயது மதிக்கத்தக்க பெண் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.