Reading Time: < 1 minute

பிரித்தானியாவில் கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஊதியக் குறைபாடுகள் காரணமாக, அந்நாட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ விசேட நிபுணர்கள் பெருமளவில் கனடாவிற்குப் புலம்பெயரத் திட்டமிட்டு வருகின்றனர்.

Tamil Business Directory

பிரிட்டனின் பிரபல மருத்துவ இதழான ‘பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல்’ வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப மருத்துவர்களின் பற்றாக்குறையால் தவித்து வரும் கனடாவிற்கு, பிரித்தானிய மருத்துவர்களின் இந்தத் ‘படையெடுப்பு’ பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலின் நிபுணர்கள் குழுவில் உள்ள மனநல மருத்துவர் டாக்டர் ஷானி தத்தா இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

குறைந்த ஊதியம், வேலை பாதுகாப்பு இல்லாமை மற்றும் தகுதிக்கேற்ற பணியிடங்கள் கிடைக்காமை போன்றவற்றால் விரக்தியடைந்துள்ள ஏராளமான மருத்துவர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேற விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.

தமது சக ஊழியர்கள் பலரும் கனடாவைத் தங்களது முதன்மை இலக்காகத் தேர்ந்தெடுத்து அங்கு சென்றுவிட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனின் பொதுச் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், மருத்துவப் படிப்பை முடிப்பவர்களுக்கே வேலை கிடைப்பதில்லை எனவும், வேலை கிடைத்தாலும் மற்ற மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஊதியம் மிகக் குறைவாகவே உள்ளதாகவும் மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக, பிரிட்டனில் உள்ள மருத்துவர்கள் ஜூன் 15 திங்கட்கிழமை முதல் மீண்டும் ஒரு பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தை (Walkout) முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அரசாங்கத்துடனான இந்த நீண்டகாலப் பூசலில் அவர்கள் மேற்கொள்ளும் 16ஆவது வேலைநிறுத்தம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் நிலவும் சூழ்நிலைக்கு நேர்மாறான நிலை கனடாவில் உள்ளது. இங்கு நோயாளிகளுக்குப் போதுமான குடும்ப மருத்துவர்கள் (Family Doctors) இல்லை. ஹெல்த் கனடா (Health Canada) அமைப்பின் 2025ஆம் ஆண்டு அறிக்கையின்படி, கனடாவில் 22,800க்கும் அதிகமான குடும்ப மருத்துவர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.