கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கார்களின் என்ஜின் பகுதிக்குள் எலிகள் மற்றும் அணில்கள் கூடு கட்டி வயர்களைக் கடித்துச் சிதைத்ததால், ஓராண்டில் மட்டும் சுமார் 13,000 டாலர்கள் வரை பழுதுபார்ப்புச் செலவு செய்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ராக்டன் பகுதியைச் சேர்ந்த லாரா மெக்அனுல்டி (Laura McAnulty) என்பவர், கடந்த ஆண்டு தனது ‘கியா சோரெண்டோ’ காரில் அணில்கள் கூடு கட்டியதால் 7,500 டாலர்கள் செலவு செய்தார். அந்த கார் மீண்டும் பழுதாகலாம் என்ற அச்சத்தில், அவர் புதிய ‘போக்ஸ்வேகன் அட்லஸ்’ காரை கொள்வனவு செய்துள்ளார்.
ஆனால், கடந்த மார்ச் மாதம் அந்தப் புதிய காரையும் எலிகள் விட்டுவைக்கவில்லை; இம்முறை பழுதுபார்ப்புக்கு மட்டும் 6,000 டாலர்கள் செலவாகியுள்ளது.
வாகனங்களுக்குள் எலிகள் நுழைவதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம் என நுகர்வோர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காரின் தரையில் குப்பைகள் கிடப்பது, ஒருவித துர்நாற்றம் வீசுவது, கடிக்கப்பட்ட வயர்கள் மற்றும் என்ஜின் பகுதியில் காணப்படும் எச்சங்கள் ஆகியவை எலிகளின் நடமாட்டத்தை உறுதி செய்கின்றன.
எலிகள் கார் ஏர் வென்ட்கள் வழியாக உள்ளே நுழைந்து மகரந்த வடிகட்டிகளில் (Pollen Filter) தங்குவது வழக்கமானது. இதனால் வாகனங்கள் சேதமடைவது மட்டுமல்லாமல், எலிகளின் எச்சங்களால் மனிதர்களுக்குச் சுவாசப் பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எலிகளை விரட்ட சில எளிய வழிமுறைகளையும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். காருக்குள் ‘பெப்பர்மிண்ட்’ (Peppermint) ஆயில் பைகளை வைப்பது, மிளகாய் காரம் கொண்ட ‘கேப்சைசின்’ (Capsaicin) ஒட்டும் நாடாக்களை வயர்களில் சுற்றுவது ஆகியவை எலிகளைத் தடுக்கும். மேலும், காருக்குள் உணவுத் துகள்கள் சிந்தாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.
ஒருவேளை எலிகள் கூடு கட்டியிருந்தால், அதைச் சுத்தம் செய்யும் போது வாக்யூம் கிளீனர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக கிருமிநாசினி தெளித்து கையுறைகளுடன் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இத்தகைய பாதிப்புகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வாய்ப்புள்ளதால், வாகன உரிமையாளர்கள் தங்கள் பாலிசி விவரங்களைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.