ஒன்ராறியோ சட்டசபையில் கடந்த வாரம் நடைபெற்ற விவாதத்தின் போது லிபரல் கட்சி உறுப்பினர் ஸ்டெபானி ஸ்மித்தை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததற்காக, ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் பின்னர் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் குறித்து ஸ்மித் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதிலளித்த டக் போர்ட், அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பணியாற்றிய CP24 ஊடகம் அவரை விரும்பாததால் தான் சட்டசபைக்கு வந்துள்ளார் என கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முதல்வரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உடனடியாக மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர். ஆனால் அச்சமயம் டக் போர்ட் மன்னிப்பு கோர மறுத்திருந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட ஸ்டெபானி ஸ்மித், முதல்வர் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டதாகவும், அதைத் தாம் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டசபைக்குள் நுழையும் அனைவரும் மக்களின் நலனுக்காக சிறந்த முறையில் செயல்படுவது முக்கிய கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.