எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் போது, டொராண்டோ நகரின் போக்குவரத்தை தடையின்றி பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க மாநகர முதல்வர் ஒலிவியா சௌ தலைமையிலான செயற்குழு பரிந்துரை செய்துள்ளது.
போக்குவரத்துத் துறையின் பொது மேலாளர், ஜூன் 10 முதல் ஜூலை 31 வரையிலான காலப்பகுதியில் எந்தவொரு சாலையையும் 90 நாட்கள் வரை தற்காலிகமாக மூட அதிகாரம் பெறுவார்.
வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து விதிகளை உலகக்கோப்பை தேவைகளுக்கு ஏற்ப தற்காலிகமாக மாற்றியமைக்க இவருக்கு அனுமதி அளிக்கப்படும். போட்டி நடைபெறும் நாட்களில், கார்டினர் எக்ஸ்பிரஸ்வே சாலையின் நுழைவுப் பாதைகளை குறிப்பிட்ட நேரங்களில் (மதியம் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை) திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
லிபர்ட்டி வில்லேஜில் உள்ள டொராண்டோ மைதானத்தில் ஜூன் 12 முதல் ஜூலை 2 வரை 6 போட்டிகள் நடைபெறவுள்ளன.
சுமார் 3,00,000 சுற்றுலாப் பயணிகள் டொராண்டோவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நகரின் போக்குவரத்து 15 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். நேதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் மினி கால்பந்து மைதானம் அமைக்கப்படவுள்ளது.
அங்கு மே 18 முதல் ஜூலை 20 வரை மதுபானம் விற்கவும் அனுமதி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாத்தர்ஸ்ட் , ஹார்பர்ஃபிரண்ட் ஆகிய வழித்தடங்களில் ஸ்ட்ரீட்கார் சேவைகள் அதிகரிக்கப்படும்.
கோ டிரான்சிட் ரயில்கள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும். உலகக் கிண்ணப் போட்டிகளின் போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த மாற்றங்கள் அவசியமானவை,” என மாநகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.