Reading Time: 2 minutes

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) விசேட அஞ்சலி நிகழ்வும் திருப்பலி ஆராதனையும் இடம்பெற்றது.

Tamil Business Directory

இந்த நிகழ்வில், சர்வமத தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டு, உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியின் இரு மருங்கிலும் பெருந்திரளான மக்களும் திரண்டு, அஞ்சலி செலுத்தியதோடு, தாக்குலுக்கு நீதி வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்தனர்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு இலக்கான, கொச்சிக்கடை தேவாலய பகுதியில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

அதேநேரம், ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியார் ஆலயத்திலிருந்து நேற்று மாலை ஆரம்பமாகியிருந்த அமைதிப் பேரணியும் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை வந்தடைந்துள்ளது.

இந்த நிலையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்தோடு, நினைவேந்தல் நிகழ்வொன்றும் நடத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் காலிமுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதனால், கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.