கனடாவின் எட்மண்டன் நகரில், மாரடைப்பால் உயிருக்கு போராடிய ஒருவருக்கு உடனடி முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்ற உதவிய மருத்துவருக்கு, பின்னர் $250 ஆம்புலன்ஸ் கட்டணப் பட்டியல் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஜூன் 19ஆம் தேதி எட்மண்டனின் Riverbend பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற கூடைப்பந்து பயிற்சியின் போது நிகழ்ந்தது.
அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு இதயநிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்த மருத்துவர் Dr. Ian Sutanto, உடனடியாக CPR முதலுதவியை தொடங்கினார்.
அதிர்ஷ்டவசமாக அந்த பள்ளியில் Automated External Defibrillator எனப்படும் AED கருவி இருந்ததால், அதைப் பயன்படுத்தியும் அவசர உதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையில், நீண்ட நேரம் CPR செய்ததால் சோர்வடைந்திருந்த Dr. Sutanto-வை அங்கிருந்த அவசர மருத்துவப் பணியாளர்கள் பரிசோதித்தனர். ஆனால் சில நாட்கள் கழித்து, அவருக்கு $250 ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்துமாறு பில் அனுப்பப்பட்டது.
தாம் ஆம்புலன்ஸில் ஏறிச் செல்லவில்லை என்றும், ஒரு உயிரைக் காப்பாற்ற முயன்ற பிறகு தன்னை பரிசோதித்ததற்காகவே இந்த கட்டணம் வந்தது தமக்கு அதிர்ச்சியாக இருந்ததாகவும் Dr. Sutanto தெரிவித்துள்ளார்.
Alberta-வில் நிலவும் விதிகளின்படி, ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டு நோயாளர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படாவிட்டாலும் $250 கட்டணம் விதிக்கப்படலாம். நோயாளி ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டால் கட்டணம் $385 ஆகும்.
இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, Dr. Sutanto-வுக்கு அனுப்பப்பட்ட கட்டணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் Alberta-வின் ஆம்புலன்ஸ் கட்டணக் கொள்கை குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவசரநேரத்தில் உதவி தேவைப்படும் பொதுமக்கள், கட்டண அச்சத்தால் ஆம்புலன்ஸ் அழைப்பதைத் தவிர்க்கக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்ற முனைந்தவருக்கே கட்டணப் பட்டியல் அனுப்பப்பட்ட இந்த சம்பவம், அவசர மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு எவ்வாறு அணுகத்தக்கதாக இருக்க வேண்டும் என்ற கேள்வியை மீண்டும் முன்வைத்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.