FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் குழுநிலை இறுதிப் போட்டியில், கனடா அணி சுவிட்சர்லாந்திடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.
வான்கூவரில் உள்ள BC Place மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற சுவிட்சர்லாந்து, குழு ‘B’ இல் முதலிடத்தைப் பிடித்தது. தோல்வியடைந்த போதிலும், கனடா இரண்டாம் இடத்துடன் Round of 32 எனப்படும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
முதல் பாதி கோலின்றி முடிந்த நிலையில், இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே சுவிட்சர்லாந்து ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 46வது நிமிடத்தில் Rubén Vargas முதல் கோலைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து 57வது நிமிடத்தில் Johan Manzambi இரண்டாவது கோலை அடித்து சுவிட்சர்லாந்துக்கு 2-0 முன்னிலை பெற்றுத்தந்தார்.
பின்னர் மாற்று வீரராக களமிறங்கிய கனடாவின் Promise David, 76வது நிமிடத்தில் அழகான கோலை அடித்து கனடாவுக்கு நம்பிக்கை அளித்தார். எனினும் இறுதிவரை போராடிய கனடாவால் சமநிலை கோலைப் பெற முடியவில்லை.
முன்னதாக Qatar அணியுடனான போட்டியில் கடுமையாக காயமடைந்த கனடா நடுகள வீரர் Ismaël Koné, இந்தப் போட்டியின் போது மைதானத்திற்கு வந்து அணியினருக்கும் ரசிகர்களுக்கும் ஆதரவு தெரிவித்தார்.
இந்த தோல்வியால் கனடா, வான்கூவரில் தொடர்ந்தும் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது. அடுத்ததாக கனடா, வரும் ஞாயிற்றுக்கிழமை Los Angeles நகரில் நடைபெறவுள்ள Round of 32 ஆட்டத்தில் South Africa அணியை எதிர்கொள்ளவுள்ளது.
சுவிட்சர்லாந்து, குழு ‘B’ முதலிட அணியாக முன்னேறியுள்ளதால், ஜூலை 2ஆம் திகதி வான்கூவரில் நடைபெறும் நாக்-அவுட் சுற்றுப் போட்டியில் விளையாடவுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.