Reading Time: < 1 minute

வம்சாவளி அடிப்படையில் கனேடிய குடியுரிமை அங்கீகாரம் பெற்று, அதற்கான சான்றிதழ்களையும் பெற்ற சிலரிடம் அவற்றைத் திருப்பி ஒப்படைக்குமாறு கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை திடீரென அறிவித்துள்ளமை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் சிலவற்றை மீளாய்வு செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை முதலில் வெளியிடப்படாத நிலையில், பின்னர் சில டஜன் நபர்களுக்கு இத்தகைய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.

கனேடிய மூதாதையர் ஒருவர் இருப்பதைக் காட்டுவது மட்டும் குடியுரிமைக்குப் போதுமானதல்ல என குடிவரவுத் துறை அமைச்சர் லீனா மெட்லெஜ் டயப் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கும் கனடாவுக்கும் இடையிலான வம்சாவளித் தொடர்பை ஒவ்வொரு தலைமுறையிலும் தெளிவான ஆவணங்களின் மூலம் நிரூபிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மரபியல் மற்றும் குடும்ப வரலாற்று இணையத்தளங்களில் கிடைக்கும் தகவல்கள் மட்டும் குடியுரிமையை உறுதிப்படுத்தப் போதுமான ஆதாரங்களாகக் கருதப்படாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

2025ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட மாற்றம்

2025 டிசம்பர் 15ஆம் திகதி நடைமுறைக்கு வந்த Bill C-3 சட்டத்தின் மூலம், வம்சாவளி அடிப்படையிலான குடியுரிமைக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த முதலாவது தலைமுறைக் கட்டுப்பாடு மாற்றப்பட்டது.

இதன்படி, 2025 டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் கனடாவுக்கு வெளியே பிறந்த இரண்டாவது அல்லது அதற்குப் பிந்தைய தலைமுறையினரில் பலருக்கு, அவர்களது பெற்றோர் வழியான கனேடிய குடியுரிமைத் தொடர்பை நிரூபிப்பதன் மூலம் குடியுரிமை அங்கீகாரம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

இந்தச் சட்ட மாற்றத்தின் கீழ் விண்ணப்பித்து குடியுரிமைச் சான்றிதழ்களைப் பெற்ற சிலருக்கு கடந்த வார இறுதியில் குடிவரவுத் துறை கடிதங்களை அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதங்களில், விண்ணப்பத்துடன் அசல் அதிகாரபூர்வ ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை அல்லது அத்தகைய ஆவணங்களைப் பெற மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பான போதிய விளக்கங்கள் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, ஏற்கனவே வழங்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழ்களை அரசிடம் திருப்பி ஒப்படைக்குமாறும், அவர்களது விண்ணப்பங்கள் மீளாய்வு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்கள் மீண்டும் வழங்கப்படலாம்

இந்த நடவடிக்கை குடியுரிமையை உடனடியாக ரத்து செய்வதாகக் கருதப்படவில்லை. கடிதம் பெற்றவர்கள் தங்கள் வம்சாவளியை உறுதிப்படுத்தும் மேலதிக அதிகாரபூர்வ ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படும் என குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.

மீளாய்வின்போது அவர்கள் கனேடிய குடியுரிமைக்குத் தகுதியானவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டால், குடியுரிமைச் சான்றிதழ்கள் மீண்டும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனினும், குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னர் அவற்றை மீண்டும் திரும்பக் கோருவது நியாயமற்றது என குடிவரவு சட்டத்தரணிகள் விமர்சித்துள்ளனர். விண்ணப்பத்தை முதன்முறையாகப் பரிசீலித்தபோதே கூடுதல் ஆவணங்களைக் கோரியிருக்க முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.