கனடாவில் லொட்டரியில் 46 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு வென்ற ஒருவர், அந்தப் பணத்தை தனது குடும்பத்தினருக்கும் சமூக நலத்திற்கும் பயன்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
மனித்தோபா மாகாணத்தின் Whitemouth பகுதியில் வசிக்கும் எர்ல் கீஸ்பிரெக்ட் (Earl Giesbrecht), லொட்டரி சீட்டுகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டவர்.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 1,200 டொலர்கள் மட்டுமே வென்றிருந்த அவருக்கு, இம்முறை 46 மில்லியன் கனேடிய டொலர்கள் என்ற மிகப்பெரிய பரிசு கிடைத்துள்ளது.
இந்தத் தொகை இலங்கை மதிப்பில் சுமார் 1,118 கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும்.
லொட்டரியில் வென்ற பணத்தை தனது அன்பிற்குரியவர்களுக்காக செலவிட விரும்புவதாக எர்ல் தெரிவித்துள்ளார். தனது பிள்ளைகள் மற்றும் மருமக்கள் விரும்பும் கார்களை வாங்கிக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தனது பேரப்பிள்ளைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கும் இந்தப் பணம் பயனளிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது ஊரில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கும் உதவ முன்வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான தண்ணீர் டேங்க் வாங்குவதற்காக ஏற்கனவே திரட்டப்பட்டுள்ள தொகைக்கு மேலாக எவ்வளவு பணம் தேவைப்படுகிறதோ, அந்தத் தொகையை வழங்கத் தயார் எனவும் எர்ல் தெரிவித்துள்ளார்.
பெரும் பரிசுத் தொகையை வென்ற பிறகும், குடும்பத்தினரையும் சமூகத்தையும் நினைத்து உதவ முன்வந்துள்ள எர்லின் செயல் பலரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.