கனேடிய தயாரிப்பான துப்பாக்கிகள் ரஷ்யர்களின் கையில் இருப்பதை காட்டும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருவதால் கனடாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கனேடிய அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட நிறுவனமும் விசாரணையை ஆரம்பித்துள்ளன.
சமீப நாட்களில் சமூக ஊடகங்களில் வெளியாகிய காட்சிகளில், கனடாவின் Cadex நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Cadex rifle வகை துப்பாக்கிகள் மாஸ்கோவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதோடு, ரஷ்ய ஸ்னைப்பர் வீரர்கள் அவற்றைப் பயன்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
ரஷ்யா–உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், ரஷ்யாவுக்கு எதிராக கனடா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள் கடும் தடைகள் விதித்தன. குறிப்பாக, ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்வதற்கு கனடா தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கனேடிய தயாரிப்பான துப்பாக்கிகள் எவ்வாறு ரஷ்யர்களின் கைக்கு சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கனேடிய பாதுகாப்பு உளவுத்துறை அதிகாரிகள் கியூபெக்கில் செயல்படும் ஆயுத உற்பத்தி நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதேசமயம் Cadex நிறுவனமும் தனிப்பட்ட உள்துறை விசாரணையை ஆரம்பித்தது.
Cadex நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, தாங்கள் வேறு ஒரு நாட்டிற்கோ அல்லது வாடிக்கையாளருக்கோ அனுப்பிய துப்பாக்கிகள் மோசடியாக ரஷ்யாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
மேலும், ரஷ்யாவுக்கு துப்பாக்கிகளை அனுப்ப எந்தவித அனுமதியையோ அங்கீகாரத்தையோ தாங்கள் வழங்கவில்லை என்றும், தங்களுக்குத் தெரியாமலேயே அவை ரஷ்யாவை சென்றடைந்துள்ளதாகவும் Cadex நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், சர்வதேச ஆயுத வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் ஏற்றுமதி கண்காணிப்பு முறைகள் குறித்து கனடாவில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.