கனடாவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பிரதமர் Mark Carney பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை (Federal Fuel Excise Tax) தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, சாதாரண பெட்ரோல் லிட்டருக்கு சுமார் 10 காசுகளும், டீசல் லிட்டருக்கு 4 காசுகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரிச்சலுகை வரும் ஏப்ரல் 20 முதல் Labour Day (செப்டம்பர் 7) வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய சூழலில், அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக மாறுபட்டு வருகிறது. குறிப்பாக, உலகின் முக்கிய எண்ணெய் கடத்தல் வழியான Strait of Hormuz பகுதியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், சர்வதேச சந்தையில் அழுத்தம் அதிகரித்துள்ளது.
இதன் தாக்கமாக, கனடாவின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 காசுகளுக்கும் மேலாக உயர்ந்துள்ளது.
ஆனால், இந்த நடவடிக்கை போதுமானதல்ல என எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre விமர்சித்துள்ளார். எரிபொருளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி (GST) உள்ளிட்ட அனைத்து வரிகளையும் இந்த ஆண்டு இறுதிவரை நீக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஒரு குடும்பத்திற்கு சராசரியாக $1,200 வரை சேமிக்க முடியும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த வரிச்சலுகை செப்டம்பருக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்ற கேள்விக்கு, எரிசக்தி அமைச்சர் Tim Hodgson, “அந்த நேரத்தில் நிலவும் நிதிநிலை மற்றும் உலகளாவிய சூழ்நிலைகளைப் பொருத்தே முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
குறிப்பாக, 1995 முதல் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 10 காசுகளும், 1987 முதல் டீசலுக்கு 4 காசுகளும் மத்திய கலால் வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.