Reading Time: < 1 minute

கனடாவின் ஒட்டாவா, கிழக்கு ஒண்டாரியோ மற்றும் மேற்கு கியூபெக் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவாகியுள்ளதாக ‘எர்த் குவேக்ஸ் கனடா’ தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

செவ்வாய்க்கிழமை மதியம் 12:36 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையம் கியூபெக்கின் ஷாவ்வில்லே (Shawville) பகுதிக்கு வடகிழக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் பதிவாகியுள்ளது.

இந்த அதிர்வுகள் ஒட்டாவா, பெம்ப்ரோக், கான்ஸ்டன்ஸ் பே மற்றும் மொன்ட்ரியல் வரை உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் கூறுகையில், “ஏதோ பெரிய லாரி கடந்து செல்வது போன்ற சத்தம் கேட்டது, வீட்டின் சுவர்களில் இருந்த புகைப்படங்கள் கீழே விழுந்தன” என்று தெரிவித்தனர்.

சில பகுதிகளில் நில அதிர்வு சுமார் 15 முதல் 20 விநாடிகள் வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இல்லை, யாரும் காயமடையவில்லை, ஷாவ்வில்லே மேயர் பில் மெக்லியரி தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது அவர் ஒரு பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது ஒரு பெரிய வெடிச்சத்தம் போன்ற சத்தம் கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் இதே போன்ற சிறிய அளவிலான நில அதிர்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010-ம் ஆண்டு ரிக்டர் அளவில் 5-ஆகப் பதிவான நிலநடுக்கமே இப்பகுதியில் கடைசியாக உணரப்பட்ட பெரிய நிலநடுக்கமாகும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.