கனடாவில் இந்த ஆண்டில் 250,000-க்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகும் என்றும், சுமார் 90,000 பேர் புற்றுநோயால் உயிரிழக்கக்கூடும் என்றும் புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தகவல் Canadian Medical Association Journal (CMAJ) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் மூலம் வெளியாகியுள்ளது.
புற்றுநோய் இன்னும் கனடாவில் மரணங்களுக்கான முதன்மை காரணமாகத் தொடர்கிறது என்று ஆய்வு குறிப்பிடுகிறது.
அதே நேரத்தில், நுரையீரல், பெருங்குடல், சிறுநீர்ப்பை மற்றும் லுகேமியா போன்ற புற்றுநோய் வகைகளில் பாதிப்பு மற்றும் மரண விகிதம் குறைந்து வருவது மருத்துவ முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
நுரையீரல் புற்றுநோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தினாலும், புகைபிடித்தலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் நல்ல பலன் அளித்து வருகின்றன.
இதற்கிடையில், கர்ப்பப்பை வாய்ப்புற்று, கணையப்புற்று மற்றும் தலை-கழுத்துப் பகுதி புற்றுநோய்கள் அதிகரித்து வருவது கவலைக்கிடமானதாக பார்க்கப்படுகிறது. இவை Human papillomavirus (HPV) வைரஸுடன் தொடர்புடையவை என்பதால், தடுப்பூசி மூலம் தடுக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 50 வயதிற்குட்பட்ட இளம் வயதினரிடையே மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Dr. Jennifer Gillis தலைமையிலான ஆய்வுக் குழு, இளம் வயதினருக்கும் ஆரம்பக்கட்ட பரிசோதனைகளை (screening) விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
புற்றுநோய் தடுப்பு, ஆரம்ப கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளில் தொடர்ந்து முதலீடு செய்வது அவசியம் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.