கனடாவின் British Columbia (B.C) மாகாணத்தில் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக அறிவிக்கப்பட்ட பொதுச் சுகாதார அவசரநிலை, எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் தேதியுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
கடந்த ஒரு தசாப்தத்தில் மட்டும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டினால் 18,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் கவலைக்குரியதாக அமைந்துள்ளன.
2016ஆம் ஆண்டு இந்த அவசரநிலை அறிவிக்கப்பட்ட போது ஆண்டுக்கு 474 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில், தற்போது தினசரி சராசரியாக 5 பேர் உயிரிழக்கும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்துள்ளது.
இந்த உயிரிழப்புகளுக்குப் பிரதான காரணமாக அதிக வீரியம் கொண்ட செயற்கை ஓபியாய்டுகள், குறிப்பாக Fentanyl மற்றும் Carfentanil ஆகியவை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 14 வயதுடைய Emmy Liu முதல் 20 வயதுடைய Brandon Jansen வரை பல இளைஞர்கள் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நெருக்கடியை கட்டுப்படுத்த மாகாண அரசு முன்னெடுத்த ‘Decriminalization’ (தண்டனை நீக்கம்) மற்றும் ‘Safer Supply’ (பாதுகாப்பான விநியோகம்) போன்ற முயற்சிகள் எதிர்பார்த்தளவில் பலன் அளிக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
2023ஆம் ஆண்டு உயிரிழப்புகள் 2,590 ஆக உச்சத்தை எட்டியதைத் தொடர்ந்து, தற்போது அரசு தனது கொள்கைகளில் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, அனுமதியின்றி போதைப்பொருள் வைத்திருப்போருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டாய சிகிச்சை வழங்கும் புதிய சட்ட மாற்றங்களும் David Eby தலைமையிலான அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.




