Reading Time: < 1 minute

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மேலும் 51 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்படும் என கனடாவின் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tamil Business Directory

2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் இந்த நிதியில், 32 மில்லியன் டொலர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐநா முகமைகள் ஊடாக உணவு மற்றும் தங்குமிடம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செலவிடப்படும்.

அத்துடன், போர்க்களத்தில் இருந்து திரும்பிய வீரர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதற்கும், மனநலப் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கும் 5 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்ற வீரர்களுக்கு உதவிய அனுபவத்தைக் கொண்டு, உக்ரைன் வீரர்களுக்கும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க கனடா திட்டமிட்டுள்ளது.

இந்த நிதியுதவியின் மற்றொரு பகுதியாக, போருக்குப் பிந்தைய காலப்பகுதியில் உக்ரைனில் தேர்தல்களை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளுக்கு 6 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடிகள் நிறைந்த பகுதிகளில் வாக்குச்சாவடிகளை அமைப்பது மற்றும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள உக்ரைன் குடிமக்கள் தேர்தலில் பங்கேற்பது போன்ற சவால்களை எதிர்கொள்ள இது உதவும்.

மேலும், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான தகுதிகளைப் பெறுவதற்கும், பெண்களுக்கான சமத்துவ சட்டங்களை உருவாக்குவதற்கும் ஐநா பெண்கள் அமைப்புக்கு 5 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளது.

2022 இல் போர் தொடங்கியதிலிருந்து கனடா இதுவரை மொத்தம் 26 பில்லியன் டொலர் மதிப்பிலான உதவிகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.