Reading Time: < 1 minute

மத்திய கிழக்கில் கனடாவின் கூட்டாளி நாடுகளை குறிவைத்து ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கனடாவின் வெளிநாட்டு விவகார அமைச்சர் அனித ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.

Tamil Business Directory

கத்தாரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை தாம் கடுமையாக கண்டிப்பதாகவும், ஈரான் ஏற்படுத்தும் பதற்றத்திற்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்ளும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் கனடா ஒன்றிணைந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கருத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலுக்கு பின்னர் ஈரானின் உயரிய தலைவர் அலி கமெய்னி உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து வெளியிடப்பட்டது. தற்போது அமைச்சர் ஆனந்த், பிரதமர் மார்க் கார்னியுடன் இந்தியா பயணத்தில் உள்ளார்.

இந்த பயணம், கனடா – இந்தியா வர்த்தக மற்றும் தூதரக உறவுகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். இதற்கிடையில், ஈரானில் உள்ள கனடியர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என்றும், அந்த பிராந்தியத்தில் உள்ள கனடியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க கனடா தொடர்ந்து செயல்படும் என்றும் ஆனந்த் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலளித்த ஈரான், இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதுடன், பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும் குறிவைத்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் அணு ஆயுத திறனை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறி இந்த ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலை காரணமாக, அமெரிக்க தாக்குதல்களுக்கு கனடா அளிக்கும் ஆதரவு பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.